» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மெக்சிகோ ஏற்றுமதி மீதான வரி உயர்வு காலவரையின்றி ரத்து: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஞாயிறு 9, ஜூன் 2019 9:52:53 AM (IST)

மெக்சிகோ ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி உயர்வு நடவடிக்கை காலவரையின்றி கைவிடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.  

மத்திய அமெரிக்காவில் இருந்து வரும் அகதிகள் மற்றும் கடத்தல்காரர்களைத் தடுக்க தக்க நடவடிக்கை எடுப்பதாக மெக்சிகோ அரசு உறுதி அளித்ததை தொடர்ந்து அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாட்டின் வறுமை மற்றும் வன்முறை நிறைந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி வருகிறார்கள். அவர்களில் பலர் எல்லைக்காவல் படையினரால் கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 10,000 பேர் மெக்சிகோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மெக்சிகோ எல்லை வழியே நுழையும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆகியோரைத் தடுக்க மெக்சிகோ கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மெக்சிகோ இதை செய்ய தவறினால் எல்லைகளை நிரந்தமாக மூடிவிடுவேன் என கடந்த மார்ச் மாதம் டிரம்ப் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் கட்டும் முயற்சியிலும் அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் மெக்சிகோ மீதான அழுத்ததை அதிகரிக்கும் நோக்கத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மெக்சிகோ நாட்டு பொருட்கள் மீது 5 சதவீதம் வரி உயர்த்தப்படும். ஒவ்வொரு மாதமும் 5 சதவீதம் விதம் 25 சதவீதம் வரை வரி உயர்த்தப்படும். ஜூன் 10ம் தேதி முதல் இந்த வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்று கடந்த வாரம் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க மெக்சிகோ ஒப்புக்கொண்டது. இது தொடர்பான அமெரிக்கா- மெக்சிகோ கூட்டு அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டது.

அதன்படி அமெரிக்காவிடம் தஞ்சம் கேட்கும் ஆயிரக்கணக்கான அகதிகளை மெக்சிகோவுக்கு அனுப்பும் திட்டம் விரிவாக்கப்படும். அவ்வாறு அனுப்பப்படும் அகதிகளுக்கு தேவையான வேலைவாய்ப்பு, மருத்துவ வசதிகள், கல்வி ஆகியவற்றை மெக்சிகோ அரசு வழங்க வேண்டும். மத்திய அமெரிக்க குடியேறிகள் மெக்சிகோவில் நுழைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும்.அதற்காக நாடு முழுவதும் குறிப்பாக தெற்கு எல்லையில் மெக்சிகோவின் தேசிய பாதுகாப்பு படை நிறுத்தப்படும்.

ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் கும்பல்களை ஒடுக்க மெக்சிகோ உரிய பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அமெரிக்காவின் இந்த நிபந்தனைகளை மெக்சிகோ ஏற்று கொண்டதை தொடர்ந்து மெக்சிகோ ஏற்றுமதி பொருட்கள் மீதான வரி உயர்வு காலவரையின்றி கைவிடப்படுவதாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் நன்றி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory