» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை கவலைக்கிடம்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

திங்கள் 3, அக்டோபர் 2022 11:18:44 AM (IST)

உ.பி. மாநிலத்தின் முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சமாஜ்வாதி கட்சியை தொடங்கிய முலாயம் சிங் யாதவ், உ.பி. மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவிவகித்துள்ளார். மேலும் மத்திய அமைச்சராகவும் பதவிவகித்துள்ளார். கடந்த 2012-ல் உ.பி.யில் சமாஜ்வாதி பெருவாரியான வெற்றி பெற்றபோது மகன் அகிலேஷ் யாதவை, முதல்வராக பதவியில் உட்கார வைத்தார் 82 வயதான முலாயம். கட்சிப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த முலாயம் 2019 மக்களவைத் தேர்தலில் மைன்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குருகிராமிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை மோசமானதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

முலாயம் சிங் உடல் நிலை குறித்த செய்தி வெளியானதும், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் அவர் குணமடைய வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகின்றனர். அகிலேஷ் யாதவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என உறுதி அளித்துள்ளார். இதுபோல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோரும் முலாயம் உடல் நலம் பெற வாழ்த்து செய்தி தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory