» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது : ராகுல் காந்தி பேச்சு!

திங்கள் 16, மே 2022 10:46:41 AM (IST)

மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இதனை சீர்செய்ய   கட்சி சார்பில் நாடு முழுவதும் அக்டோபர் முதல் பாதயாத்திரைகள் நடைபெறும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது, இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சில மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒருகட்டமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் 3 நாள் சிந்தனை கூட்டத்தை கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் கூட்டியது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா உட்பட சுமார் 400 தலைவர்கள் கலந்துகொண்டனர். அடுத்தகட்ட தேர்தல் வியூகங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று ராகுல் காந்தி பேசியதாவது: மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பு முறிந்த நிலையில் உள்ளது. இந்த உண்மை நிலவரத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாஜக மக்களுடன் நல்ல தொடர்பில் உள்ளது. அவர்களிடம் அதிக பணம் உள்ளது, நாம் மக்களுடனான தொடர்பை சீர்படுத்த வேண்டும். இந்த தொடர்பை மீண்டும் ஏற்படுத்தி கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, அக்டோபர் மாதம் முதல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை மேற்கொள்ளும். மக்களும் மீண்டும் இணைப்பை ஏற்படுத்த நாம் கடினமாக உழைக்க வேண்டும். நாட்டை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முன்னேற்ற முடியும் என்பது மக்களுக்கு தெரியும்.

மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த குறுக்குவழி ஏதும் இல்லை. மூத்த தலைவர்கள், இளையவர்கள் என அனைவரும் மக்களைச்சந்திக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை முதன்மையான தேசிய அளவிலான எதிர்க்கட்சியாக வலுப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியைப்போல் மாநிலக் கட்சிகளால் பாஜகவுக்கு எதிராக போராட முடியாது. வெறுப்பு மற்றும் வன்முறை கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிறது. காங்கிரஸ் பற்றிதான் பாஜக பேசுகிறது. மாநில கட்சிகளை பற்றி பேசாது. ஏனென்றால், நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை மாநில கட்சிகளுக்கு இல்லாததால், அவற்றால் தங்களை வீழத்த முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும்.

நாட்டில் உள்ள முக்கியமான அதிகாரஅமைப்புகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டு, அவற்றின் குரல்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. அந்த அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் ஊடுருவிவிட்டது. நீதித்துறை தவறாக வழிநடத்தப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் கைகள் முடக்கப்பட்டுள்ளன. அச்சுறுத்தல், மிரட்டல் மூலம் ஊடகங்கள்அமைதியாக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினரின் குரல்வளையை நெரிக்க, இஸ்ரேல் ராணுவ தயாரிப்பான ‘பெகாசஸ்’ என்ற உளவு பார்க்கும் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. ஆனால், நாட்டில் வேலைவாய்ப்பின்மை, இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தில் உள்ளது. இவற்றை மக்களிடம் எடுத்துக்கூறி உணரவைப்பது நமது பொறுப்பு. வெறுப்புஅரசியல் மூலம் மக்கள் பிளவுபடுத்தப்படுகின்றனர். இது நாட்டுக்கு எந்தவிதத்திலும் பலன் அளிக்காது. இவ்வாறு ராகுல் பேசினார். அடுத்து நடக்கவுள்ள சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சிக்குள் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த ‘நவ் சங்கல்ப்’ என்ற செயல் திட்டம் நேற்று உருவாக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory