» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நேதாஜியின் ஊக்கத்தை பின்பற்றி இளைஞர்கள் கடமை ஆற்ற வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

திங்கள் 24, ஜனவரி 2022 5:39:10 PM (IST)

நேதாஜியிடமிருந்து ஊக்கத்தை பெற்று நாட்டின் கடமைப் பாதையில் இளைஞர்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் தேசிய பால புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது: சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா கொண்டாடும் முக்கியமான தருணத்தில் இவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த காலத்திலிருந்து வலிமையைப் பெற்று அமிர்த காலமான வரும் 25 ஆண்டுகளில் மகத்தான விளைவுகளை உருவாக்க அர்ப்பணிப்பதற்கான தருணம் இது. 

டெல்லியில் இந்தியாவின் நுழைவாயில் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் டிஜிட்டல் வடிவிலான உருவச்சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. தேசத்திற்கான கடமை என்பதில் நேதாஜியிடமிருந்து மிகப் பெரும் ஊக்கத்தை நாம் பெற்றிருக்கிறோம். நேதாஜியிடமிருந்து இந்த ஊக்கத்தை எடுத்துக் கொண்டு நாட்டின் கடமைப் பாதையில் நீங்கள் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும். எந்தத் துறையும், கொள்கைகளும், முன்முயற்சிகளும் இளைஞர்களை மையப்படுத்தி உள்ளன. 

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் புதிய சகாப்தத்தில் தலைமை தாங்குவதற்கு இந்திய இளைஞர்களின் வேகம் பொருத்தமாக உள்ளது. புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதிய தொழில்கள் துறையில் இந்தியாவின் சக்தி அதிகரித்து வருகிறது. இன்று புதிய தொழில்கள் உலகத்தில் இந்தியாவின் இளைஞர்கள் சிறந்து விளங்குவதைக் காணும் போது நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவின் இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதால் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

நாட்டின் புதல்விகள் முற்காலத்தில் அனுமதிக்கப்படாத துறைகளிலும் கூட இன்று சிறப்பாக பணியாற்றுகிறார்கள். புதிய கண்டுபிடிப்பிலிருந்து பின்வாங்காத புதிய இந்தியா இது. துணிவும், உறுதியும் இன்றைய இந்தியாவின் அடையாளங்களாகும். ஜனவரி 3-லிருந்து வெறும் 20 நாட்களில் 40 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். உள்ளூர் பொருட்களை ஆதரிக்கும் தூதர்களாக இருக்குமாறும், தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு தலைமை தாங்குமாறும் இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory