» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எக்ஸ்பிரஸ்களில் பழைய கட்டண நடைமுறை அமல் : சிறப்பு ரயில் நடைமுறையை கைவிட உத்தரவு

சனி 13, நவம்பர் 2021 12:42:57 PM (IST)

நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரயில்களும் அடுத்த ஒரு சில நாட்களில் கரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட உள்ளன.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. ரயில்வேயும் பயணிகளின் சேவையை முழுமையாக ரத்து செய்தது. அதன் பிறகு ஊரடங்கு நேரத்தின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.
 
இந்த சிறப்பு ரயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகு குறுகிய தூர ரயில்களும் இயக்கப்பட்டன. ஆனால் அனைத்து ரயில்களையும் சிறப்பு ரயில்கள் அடிப்படையிலேயே ரயில்வே துறை இயக்கியது. இதனால் ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன.

இதையடுத்து சிறப்பு ரயில் நடைமுறையை கைவிட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களும் சிறப்பு ரயில்களாகவும், விடுமுறை கால சிறப்பு ரயில்களாகவும் இயக்கப்பட்டு வந்தன.

இந்த ரயில்கள் அனைத்தும் கரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இயக்க அறிவுறுத்தப்படுகிறது. ரயில்வே வாரிய பயணிகள் சந்தைப்படுத்துதல் இயக்குனர் அலுவலகத்தின் ஒப்புதலுடன் இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில் இருந்து பழைய கட்டண நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது குறித்து அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய கட்டண நடைமுறையில் ரயில்களை இயக்க ரயில்வே மண்டலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு ரயில்வே வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். இந்த உத்தரவின் மூலம் நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரயில்களும் அடுத்த ஒரு சில நாட்களில் கரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறையில் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory