» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தகுதியானவர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சம் வேண்டாம். : வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு

ஞாயிறு 24, மே 2020 2:44:36 PM (IST)

கடன்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதால், வங்கிகள் தகுதியான வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சப்பட வேண்டாம். என்று வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க ரூ.21 லட்சம் கோடி மதிப்பிலான தற்சார்பு பொருளாதாரத் திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். அந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை கடந்த வாரம் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு தொடர்பாக கடன் வழங்குதல், பொருளாதார மறுமலர்ச்சிக்கான நடவடிக்கை குறித்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட அம்சங்கள் குறித்து பாஜக தலைவர் நலின் கோலியிடம் காணொலி மூலம் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.அதில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கிடுங்கள் என்று பொதுத்துறை வங்கிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள், வங்கிகளின் பொது மேலாளர்களுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். கடன்களுக்கு 100 சதவீதம் மத்திய அரசு பொறுப்பேற்றுள்ளதால், வங்கிகள் தகுதியான வாடிக்கையாளர்களுக்குக் கடன் வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்.

கடன் கொடுத்த வங்கியோ அல்லது வங்கி அதிகாரிகளோ கடன்களை வசூலிக்காவிட்டால் அவர்களை வலுக்கட்டாயமாக இழுக்கமாட்டார்கள். இந்த விஷயத்தை நான் வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். ஒருவேளை வங்கி அதிகாரிகள், வங்கிகள் கடன் கொடுத்தது தவறாக அமைந்துவிட்டால், இழப்பு ஏற்பட்டால் 100 சதவீதம் அரசு பொறுப்பேற்கும். ஆதலால், வங்கி அதிகாரியோ அல்லது வங்கியோ எந்தவிதமான அச்சமும் இன்றி, தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கலாம்.

கூடுதலாகக் கடன் பெறுவதற்கும், செயல்பாட்டுக் கடன் பெறவும் ஒவ்வொருவரும் தகுதியானவர்கள். வங்கித்துறை எடுக்கும் நல்ல முடிவுகள் கூட சிபிஐ, மத்திய ஊழல்தடுப்புப் பிரிவு (சிவிசி), மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அலுவலகம் (சிஏஜி) ஆகிய 3 சி-க்களைப் பற்றிய அச்சத்தால் அந்த முடிவுகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கவலைப்படுகிறார்கள். அந்த 3 சி-க்களைப் பற்றிக் கவலைப்படாமல் பணியாற்றி தகுதியான வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளேன்.

குறிப்பிட்ட துறைகளின் முன்னேற்றதுக்காக மட்டும் மத்திய அரசு திட்டங்களை வகுக்காமல் முழுமையான வளர்ச்சிக்காகவே திட்டங்களை வகுக்கிறது. வேளாண் துறை, மின்துறை தவிர்த்து மற்ற துறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. குறு, நடுத்தர நிறுவனங்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்துத் துறைகளுக்கும் சேர்த்துதான் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1-ம் தேதி முதல் வங்கிகள் எந்தவிதமான பிணையும் இன்றி வாடிக்கையாளர்ளுக்குக் கடன் வழங்கும் பணியை விரைவாகத் தொடங்குவார்கள் என நம்புகிறேன். அதன்பின் பணப்புழக்கம் அதிகரித்து பொருளதாரம் வேகமெடுக்கும். கடன் வழங்கும் வழிமுறையும் எளிதாக இருக்கும். நேரடியாக வங்கி அதிகாரிகளைச் சந்திக்காமல் டிஜிட்டல் முறையிலேயே கடன் வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

M.sundaramமே 25, 2020 - 06:15:33 PM | Posted IP 108.1*****

It is only statement from FM. But the banks will acts as per their guide lines.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory