» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளா உட்பட 3 மாநிலங்களில் பாஜக தலைவர்கள் நியமனம்: தமிழகத்திற்கு விரைவில் அறிவிப்பு..?

சனி 15, பிப்ரவரி 2020 4:16:38 PM (IST)

கேரள மாநில பாஜக தலைவராக கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம், சிக்கிம், கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு பாஜகவின் புதிய மாநில தலைவர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா இன்று அறிவித்துள்ளார். கேரளா மாநில பாஜக தலைவராக கே.சுரேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச பாஜகவுக்கு தலைவராக விஷ்ணு தத் சர்மாவும், சிக்கிம் மாநில பாஜகவுக்கு தலைவராக தால் பஹதுர் சவ்ஹானும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்புகளை உடனடியாக நடைமுறைப்படுத்த பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு பாஜக புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநில பி.ஜே.பி தலைவராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை கடந்த அக்டோபர் மாதம், மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கேரள மாநில பி.ஜே.பி தலைவராக யாரும் நியமிக்கப்படவில்லை. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரள மாநிலத்தில் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் போராட்டத்துக்கு பதிலடி போராட்டம் நடத்த முடியாமல் இருப்பதற்கு மாநில தலைவர் இல்லாததே காரணம் எனக் கேரளத்தின் ஒரே பி.ஜே.பி எம்.எல்.ஏ-வான ஓ.ராஜகோபால் கருத்து தெரிவித்திருந்தார். இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கேரள மாநில பி.ஜே.பி தலைவராக கே.சுரேந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்

முன்பு கேரள மாநில பி.ஜே.பி இளைஞரணித் தலைவராக இருந்தவர் கே.சுரேந்திரன். பின்னர் கடந்த மூன்று முறை கட்சி தேர்தல் நடந்த சமயத்திலும் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அவரை மாநிலத் தலைவராக அறிவித்துள்ளார் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தவர் கே.சுரேந்திரன். சபரிமலையில் இருமுடி கட்டிச் சென்றதற்காக, கடந்த 2018 மரவிளக்கு மண்டல காலத்தின்போது கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்திருக்கிறார். கட்சிக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட கே.சுரேந்திரன் மீது கேரள காவல்துறை 249 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory