» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டர்: நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

வியாழன் 12, டிசம்பர் 2019 5:03:26 PM (IST)

தெலங்கானாவில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான லாரி டிரைவர்கள் 4 பேரை தெலுங்கானா போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். என்கவுன்ட்டர் செய்த போலீசாரை விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜி.எஸ். மணி, பி.எல்.சர்மா, பிரதீப் சர்மா ஆகியோர் தனித்தனியாகப் பொதுநலமனு தாக்கல் செய்தனர்.

தெலுங்கானா என்கவுண்டரை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளிவருவதால் உண்மைகளை கண்டறிய விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்.. அதைத் தொடர்ந்து இந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா சொந்துர் பால்டோடா மற்றும் முன்னாள் சிபிஐ தலைவர் டி.ஆர் கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட விசாரணை கமிஷனை நீதிபதிகள் நியமித்தனர்.

இந்த விசாரணை கமிஷன், தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக விசாரணை துவங்கிய 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணை கமிட்டிக்கு மத்திய ரிசர்வ் காவல் படை போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதித்தனர். அடுத்தக்கட்ட உத்தரவு வரும்வரை இந்த என்கவுண்டர் தொடர்பாக வேறு யாரும் விசாரணை நடத்த கூடாது என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory