» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சந்திராயன் 2 பின்னடைவால் இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகம்: சிவனை கட்டியணைத்து தேற்றிய பிரதமர்

சனி 7, செப்டம்பர் 2019 10:30:45 AM (IST)சந்திராயன் 2 பின்னடைவால் கண்ணீர் மல்க நின்ற இஸ்ரோ தலைவர் சிவனை கட்டியணைத்து, முதுகில் தட்டிக் கொடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தேற்றினார். 

சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர், சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நிலவின் தரைப்பகுதியில் தரை இறங்குவதாக இருந்தது. நிலவின் அருகே 2.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அது அருகே சென்றபோது திடீரென விஞ்ஞானிகளுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இஸ்ரோவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெங்களூரில் உள்ள அதன் தலைமையகம் சென்று, விஞ்ஞானிகளுடன் அமர்ந்து சந்திரயான் லேண்டர், நிலவில் தரையிறங்கும் நிகழ்வை நேரடியாக பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனால் விஞ்ஞானிகள் உடனான கட்டுப்பாட்டை லேண்டர் இழந்ததும், கவலைப்பட வேண்டாம் என்ற பிரதமர் ஆறுதல் கூறினார். பிறகு பெங்களூரிலேயே இரவு பொழுதை கழித்த மோடி, இன்று காலை 8 மணிக்கு மீண்டும் இஸ்ரோ சென்றார். விஞ்ஞானிகள் மத்தியில், அவர் உரை நிகழ்த்தினார். அப்போது இந்த சிறு தடங்கலுக்காக விஞ்ஞானிகள் வருத்தப்பட வேண்டாம், மொத்த இந்தியாவும் உங்களோடு துணை நிற்கிறது, என்று அவர் ஆறுதல் கூறினார்.

சுமார் 25 நிமிடங்கள் நீடித்த பிரதமரின் உரையில் முடிவில், விஞ்ஞானிகள் ஓரளவுக்கு உற்சாகம் பெற்றனர். தனது உரையை நிறைவு செய்து விட்டு காரை நோக்கி கிளம்பிச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது இஸ்ரோ தலைவர் சிவன் வாசல் வரை வந்து பிரதமரை வழியனுப்பினார். பிரதமர் கிளம்பப் போகும் நேரத்தில் உற்சாகம் இழந்த, முகத்தோடு கண்ணீர் மல்க மோடியிடம் சிவன் ஏதோ ஒன்றை தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் மோடி அப்படியே தனது கைகளால், சிவனின், தலையை தனது தோளில் சாய்த்தபடி அவரை கட்டி அணைத்துக் கொண்டார். இதன்பிறகு அவரது முதுகில் சுமார் 30 வினாடிகளுக்கும் மேலாக தடவி கொடுத்தார் மோடி. அப்போது சிவன் தான் அணிந்திருந்த தனது மூக்குக் கண்ணாடியை கழற்றி கையில் வைத்துக் கொண்டார். அவரது முகத்தில் பெரும் உணர்ச்சிப் பெருக்கு காணப்பட்டது. மோடி முகத்தில் லேசான இறுக்கம் அவ்வப்போது வந்து எட்டிப் பார்த்து சென்றது. இருப்பினும், அவர் மனது உடைந்ததாக தெரியவில்லை. ஒருவித பெருமிதத்தோடு மோடி சிவனுக்கு ஆறுதல் வழங்கினார்.

சிவன் முதுகில் தடவிக் கொடுத்த பிறகு, சிறிது நேரம், முதுகை தட்டிக் கொடுத்தார் மோடி. இதன் பிறகு பிரதமர் அங்கிருந்து விடைபெற்றார். இந்த நிகழ்வு அங்கு சுற்றி இருந்தவர்களை ஒரு நிமிடம் உருக வைத்து விட்டது என்றுதான் கூற வேண்டும். ஒரு மூத்த அண்ணன் ஸ்தானத்தில் இருந்து இஸ்ரோ தலைவருக்கு பிரதமர் வழங்கிய ஆறுதல் பாராட்டுகளை பெற்றுள்ளது. என்னதான் விண்ணையே ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளாக இருந்தாலும், அவர்களும் உணர்ச்சிகள் மிகுந்த மனிதர்கள்தான் என்பதை இஸ்ரோ தலைவர் உடைந்து உருகியது எடுத்துக் காட்டியது. அதிலும் ஒரு நாளா இரு நாளா, 11 ஆண்டு மிஷன் இது. மேலும், தொடர்ச்சியாக பல மாதங்களாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தூக்கத்தை தொலைத்து, பணியாற்றியுள்ளனர். ஆனால், கடைசி நிமிடத்தில், இந்த மிஷனில் ஏற்பட்ட தடை, விஞ்ஞானிகளை ரொம்பவே அப்செட்டாக்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், பிரதமரின் உரை, அவர்களுக்கு ஒரு பூஸ்ட் என்றால் மிகையில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory