» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அரசியல் பழிவாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை: சதானந்த கெளடா

வெள்ளி 23, ஆகஸ்ட் 2019 11:24:29 AM (IST)

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் காங்கிரஸின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டுள்ளதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் ப.சிதம்பரம் தவறாக கையாளப்படுகிறார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரஸின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மேலும், அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் பாஜக அரசுக்கு இல்லை.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலங்களில்தான் விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் என்ன செய்தார்களோ, அது தற்போது நிகழ்வதால் அக்கட்சியினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். சிதம்பரமும், அவரது மகன் கார்த்திக் ஆகியோருக்கு எதிரான வழக்கு குறித்து மக்கள் அனைவரும் நன்கு அறிந்துவைத்துள்ளனர்.

அரசியல் பழிவாங்குவது எங்கள் நோக்கமாக இருந்திருந்தால், ஏற்கெனவே நாங்கள் செய்திருப்போம். தற்போது எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கிறோம். பாஜகவுக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு பன்மடங்கு பெருகியுள்ளது. எனவே, அரசியல் பழிவாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

காங்கிரஸ் கட்சி தங்கள் கெளரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பாஜக அரசுமீது அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறிவருகிறது. அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் பாஜகவை ஆதரித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. பிறகட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். எனவே, பாஜக மீது காங்கிரஸ் ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறிவருகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory