» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆந்திராவில் ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

வியாழன் 13, ஜூன் 2019 5:37:12 PM (IST)ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் ரோஜாவுக்கு முக்கியப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரங்களின்போது மிகத்தீவிரமாக பிரச்சாரம் செய்தவர் ரோஜா. மேலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஜெகன்மோகன் ரெட்டிக்கு பக்கபலமாக இருந்தவர் ரோஜா. ஆகையால் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல்வராகப் பதவியேற்ற ஜெகன்மோகன் 25 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். 

ஆனால், ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது ரோஜாவுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இதன் பிறகு ஊடகங்களிடமும் ரோஜாவின் தொடர்பு குறைந்தது. ஜெகன்மோகன் திருப்பதி கோயிலுக்குச் சென்றபோதும் ரோஜா வரவில்லை. எனினும், சக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாக அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் ரோஜா. இதைத் தொடர்ந்து ரோஜாவின் அதிருப்தி குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்தன. பின்னர் ஜெகன்மோகனை ரோஜா சந்தித்துப் பேசினார். 

இந்நிலையில், நேற்று (ஜூன் 12) ஆந்திரப் பிரதேச தொழிற்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேச தொழிற்துறை உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி அம்மாநிலத்தின் மிக முக்கிய நியமன பதவிகளில் ஒன்றாகும். தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பாக நிலம் ஒதுக்குவதற்கான அனைத்து அதிகாரங்களும் இக்கழகத்திற்கே உள்ளது. எந்தவொரு புதிய தொழிற்துறை நிறுவனத்தையும் ஏற்பது, நிராகரிப்பதற்கான அதிகாரங்கள் இந்தக் கழகத்தின் தலைவருக்கு உண்டு. ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும் அரசில் முக்கியப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் மாநில அமைச்சரவையை மாற்றும்போது ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்க ஜெகன்மோகன் உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory